இமாமத்1. எப்போதும் ஒரு வழிகாட்டி வேண்டும்

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் நபிமார்களை அனுப்புவது இறைஞானத்தின் பிரகாரம் அவசியமாக இருந்தது போலவே, அவர்களுக்குப் பிறகு இறை ஞானத்தைப் போதித்து மக்களை அல்லாஹ்வின் பாதையிலும் அவனது தூதரின் பாதையிலும் அழைப்பதற்காகவும் எவ்வித மாற்றங்களுக்கும் அனுமதிக்காது மார்க்கத்தைப் பாதுகாப்பதற் காகவும் காலத்திற்குக் காலம் ஏற்படுகின்ற புதிய தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவ தற்காகவும் உலகில் எப்போதும் ஒரு வழிகாட்டி -இமாம் இருக்க வேண்டும் என்பதையும் இறை ஞானம் வலியுறுத்துகிறது.

அவ்வாறில்லையெனில், மனித வாழ்க்கையின் நோக்கமான பரிபூரணத்துவத்தை அடைந்து கொள்வதில் பின்னடைவுக்குட்பட வேண்டிய நிலை மனிதர்களுக்கு ஏற்படும். இதனால் தான், திருநபி -ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி- அவர்களுக்குப் பிறகுள்ள ஒவ்வொரு காலத்திலும் ஓர் இமாம் இருக்க வேண்டியது அவசியம் என நாம் நம்புகின்றோம்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையா ளர்களுடன் இருந்து கொள்ளுங்கள்;.'  (09:119)

இவ்வசனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் உரியதல்ல. உடனிருத்தல் என்பது, உண்மையாளர்க ளுடன் மாத்திரம் தான் என்ற நிபந்தனையுடன் வரையறுக்கப் பட்டுள்ளது. இது, எல்லாக் காலத்திலும் ஒரு பரிசுத்த இமாம் இருக்க வேண்டும் என்பதையும், அனைவரும் அவரையே பின்பற்ற வேண்டும் என்பதையும் எமக்கு உணர்த்துகின்றது. ஷீயா-சுன்னா குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரும்; இதே கருத்தையே முன்வைக்கின்றனர்.

இமாம் பஹ்ருர் ராஸீ, தனது பரவலான ஆய்வின் பின் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்யக் கூடியவன். இதனால், பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டவரையே பின்பற்றுவது எம் அனைவர் மீதும் கடமையாகும். அல்லாஹ் வினால், அவர்கள் குர்ஆனில் 'சாதிகீன்கள்' என்று குறிப்பிடப் படுகின்றனர். எனவே, என்றும் பரிசுத்தமுடைய வர்களுடன் இருப்பதே அனைவர் மீதும் கடமையாகும். ஏனெனில், பாவங்களை மேற்கொள்கின்ற சாத்தியமுள்ள நாம் பாவம் செய்யாதவரையே வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். மேலும் இவ்வசனம், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல், சகல காலங் களுக்கும் உரியதாகும். ஆகவே தான், இவ்வசனம் ஒவ்வொரு காலத்திலும் பாவங்களை விட்டும் பரிசுத்தமடைந்த இமாம் ஒருவர் இருப்பார் என்பதைக் குறிக்கின்றது.'  (தப்ஸீர் கபீர், பாக.16, பக்.221)

2. இமாமத்தின் உண்மை நிலை

இமாமத் எனப்படுவது, வெறுமனே ஆட்சி செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பதவியல்ல. மாறாக இது ஆன்மீகம் சம்பந்தமான ஓர் உயர் பதவியாகும். ஓர் இமாம், இஸ்லாமிய ஆட்சிக்குத் தலைவராக இருப்பதுடன், இம்மை-மறுமை விடயங்களில் மக்களுக்கு நேர்வழி காட்டுவதை தன் தோளில் சுமந்துள்ள பொறுப்பாளராகவும் விளங்குகின்றார். மேலும், பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பாதுகாத்து, நபியவர்கள் கொண்டிருந்த நோக்கங்களையும் அவர் நிலை நிறுத்துவார்.

இமாமத் எனும் இந்த உயரிய அந்தஸ்து, நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, அவர்களது நபித்துவத்தின் பின் பல சோதனைகளில் அவர்கள் சித்தியடைந்ததன் பிறகு வழங்கப்பட்ட கண்ணியமாகும். இப்பதவி வழங்கப்பட்ட சமயத்தில், அதனை தமது பரம்பரையினருக்கும் தருமாறு இப்ராஹீம் நபியவர்கள் வேண்டிய போது, அநியாயக்காரர்களை இது ஒரு போதும் சென்றடையாதென அவர்களுக்குக் கூறப்பட்டது.

'இன்னும், இப்ராஹீமை, அவரது இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில், அவற்றை அவர் நிறைவு செய்தார் என்பதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக, மனிதர்களுக்கு நான் உம்மை இமாமாக ஆக்குகின்றேன் என அல்லாஹ் கூறினான். அதற்கு அவர், என்னுடைய சந்ததியிலிருந்தும் (இமாம்களை ஆக்குவாயா?) எனக் கேட்டார். அதற்கு இறைவன், அநியாயக் காரர்களை எனது வாக்குறுதி சேராது எனக் கூறினான்.'  (02: 124)

இத்தகைய பதவியும் அந்தஸ்தும் வெளிப்படையான ஆட்சியைக் குறிப்பதல்ல. அது அகநிலை சார்ந்த ஒரு சிறப்பம்சமாக அமைந்திருக் கின்றது. மேலும், மேற்கூறியது போன்று இமாமத் விளங்கப்படுத்தப் படாவிட்டால், இவ்வசனம் தெளிவான தொரு விளக்கத்தையும் கொண்டிராது.1 2 3 4 5 6 7 8 next