நிர்வாக அதிகாரிகளுக்கான ஆலோசனைகள் ஹஸரத் அலி (அலை) வழங்கியதுசாதாரண மனிதன்

நிர்வாகத்தில் நீதியைப் பேணுவதோடு அதனை உமக்கு விதியாக்கிக் கொள்வீராக. மக்களின் சம்மதத்துக்கு மதிப்பளிப்பீராக. ஏனெனில் பொது  மக்களின் அதிருப்தி யானது வசதி படைத்த ஒரு சிலரின் திருப்தியை அழித்து விடுவதோடு ஒரு சிலரின் அதிருப்தியானது பலரின் திருப்தியில் மங்கி மறைந்துவிடும். வசதிபடைத்த சிலர் நெருக்கடிமிக்க வேளைகளில் உமக்குப் பக்கத்துணையாக வரமாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வீராக. அவர்கள் நீதியை விட்டும் ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு உரியவற்றிலும் பார்க்க மேலதிகமாகக் கேட்பார்கள். அவர்களுக்குச் செய்த நன்மைகளுக்காக அவர்கள் நன்றி செலுத்தவும் மாட்டார்கள். சோதனைகள் வரும்போது அவர்கள் பொருமை இழப்பதோடு தங்கள் குறைகளையிட்டு வருந்தவும் மாட்டார்கள். தேசத்தினதும் சன்மார்க்கத்தினதும் சக்தியாக இருப்பது சாதாரன மனிதனே. அவன் எதிரியோடு போராடுவான். எனவே சாதாரண மக்களோடு நெருக்கமாக இருந்துகொண்டு அவர்களது  நலனில் அக்கரை செலுத்துவீராக.

பிறரின் பலவீனங்களைத் துருவி ஆராய்பவர்களைத் தூரத்தில் வைத்துக் கொள்வீராக. ஏனெனில் பொதுமக்கள் தவறு செய்யாமல் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு கேடயமாக இருக்க வேண்டியவர் ஆட்சியாளரே மறைவானவற்றை வெளிப்படுத்த வேண்டாம். ஆனால் வெளிப்படையான தவறுகளைத் திருத்த முயற்சிப்பீராக. உமது கண்களுக்கு புலப்படாத அனைத்தையும் இறைவன் அவதானித்துக் கொண்டிருக்கின்றான். அவன் மட்டுமே அவற்றுக்கு தக்க நடவடிக்கை எடுக்கக் கூடியவனாக இருக்கின்றான் பொதுமக்களின் குறைகளை உம்மால் இயன்ற அளவுக்கு மறைப்பீராக அவ்வாரே நீர் பொதுமக்களுக்குக் காட்டிக் கொள்ள விரும்பாத உமது பலவீனங்களை இறைவனும் மறைத்துவிடுவான். பொது மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான குரோத மனப்பான்மைகளைக் களைந்தெரிவீராக. அவர்களுக்கிடையே உரவுகள் பாதிக்கப்படுவதற்கான சகல காரணங்களையும் அகற்றுவீராக. உமக்குப் பொருத்தமற்ற சகல காரியங்களிலிருந்தும் உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக. புறம் கூறபவர்களின் கதைகளை நம்புவதில் அவசரப்பட வேண்டாம். ஏனெனில் புறங்கூறுபவன் நண்பன் வேடத்தில் உம்மை அணுகும் ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கலாம்.

ஆலோசகர்கள்

ஓர் உலோபியிடத்தில் உபதேசம் கேட்கவேண்டாம். அவன் உமது தாராளத்தை தவிடுபொடியாக்கி உம்மை வருமையைக் கொண்டு அச்சுருத்துவான். ஒரு கோழையிடத்திலும் ஆலோசனை கேட்க வேண்டாம். அவன் உமது மனத் துணிச்சலை ஏமாற்றிவிடுவான். பேராசைக்காரனின் ஆலோசனையையும் கேட்க வேண்டாம். அவன் உம்மிடம் பேராசையை வளர்த்து உம்மை ஒரு கொடியவனாக மாற்றிவிடுவான். உலோபித்தனமும் கோழைத்தனமும் பேராசையும் ஒருவன் இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையைப் பறித்துவிடுகின்றன.

ஆலோசகர்களிலெல்லாம் மிகவும் மோசமானவன் ஒரு நீதியற்ற ஆட்சியாளனின் ஆலோசகனாக இருந்து அவனது பாதகச் செயல்களில் பங்கெடுத்துக் கொண்டவனாகும். ஆகவே கொடுமைக்காரர்களின் சகாக்களாக இருந்தவர்களையோ அவர்களது பாதகச் செயல்களிற் பங்கெடுத்தவர்களையோ உமது ஆலோசகராகச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். அவர்களிலும் பார்க்கச் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விவேகமும் தூரதிருஷ்டியும் உடையவர்கள். பாவச் செயல்களால் களங்கமடையாதவர்கள். அவர்கள் ஒருபோதும் கொடுமைக்காரர்களின் அட்டூழியங்களுக்கு ஆதரவு வழங்கவோ அல்லது பாதகர்களின் பாதகச் செயல்களில் பங்கெடுக்கவோ இல்லை. அத்தகைய மனிதர்கள் உமக்கு ஒருபோதும் சுமையாக இருக்க மாட்டார்கள். மாறாக அவர்கள் எப்போதும் உமக்கு உதவுபவர்களாகவும் உமக்கு பக்கபலமாகவும் இருப்பார்கள். அவர்கள் உமது நண்பர்களாகவும் உமது எதிரிக்கு விரோதிகளாகவும் இருப்பார்கள். உமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அத்தகையவர்களையே உமது நண்பர்களாகத் தெரிவு செய்து கொள்வீராக. அவர்கள் மத்தியிலும் கூட அவர்கள் கூறும் உண்மை உமக்கு எந்த அளவு கசப்பாக இருப்பினும் அத்தகைய உண்மை பேசுவதையே தமது வழக்கமாக்கிக் கொண்டவர்களும், இறைவன் தனது நேசர்கள் விரும்பாத போக்குகளில் உமக்கு உச்சாகமளிக்காதவர்களுமான நன்பர்களுக்கே முதலிடம் அளிப்பீராக.

நேர்வழியில் இருப்பவர்களையும் இறையச்சம் கொண்டவர்களையும் உமக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொள்வதோடு அவர்கள் உமக்கு முகஸ்துதி செய்யக் கூடாதெனவும் நீர் செய்யாத நன்மைகளுக்காக உம்மைப் பாராட்டக் கூடாதெனவும் அவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூறுவீராக. ஏனெனில் முகஸ்துதியைச் சகித்துக்கொள்வதும், நலமற்ற புகழாரமும் மனிதனின் பெருமையைத் தூண்டுவதோடு மனிதனைக் கர்வம் கொள்ளவும் வைக்கின்றது.

நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒரேமாதிரியாக நடத்தாதீர். ஏனெனில் அது நல்லவர்கள் நல்லன செய்வதைத் தடுக்கவும் தீயவர்கள் தீய வழிகளிpல் ஈடுபடுவதை ஊக்குவிக்கவுமே உதவும். ஒவ்வொருவருக்கும் அவரவர் நடத்தைக்கு தக்கவாறு கூலி கொடுப்பீராக. ஆட்சியாளருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே ஒருவருக்கொருவர் காட்டும் விசுவாசமும் நல்லெண்ணமும் வளர்வது தயாளம். நீதி, சேவை மனப்பான்மை என்பவற்றால் தான் என்பதை மறவாதீர். எனவே மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை வளர்ப்பீராக. ஏனெனில் நல்லெண்ணம் மட்டுமே உம்மை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும். நீர் மக்கள் மீது காட்டும் தயாளத்துக்குப் பதிலாக அவர்களது விசுவாசம் உமக்குக் கிடைக்கும் ஆனால் உமது அநியாயம் அவர்கள் மத்தியில் தீய எண்ணத்தையோ வளர்க்கும். மக்கள் மத்தியில் அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த உதவியிருக்கும் எமது முன்னோர்களின் ஒப்பற்ற பாரம்பரியங்களை மதித்து நடப்பீராக. அவற்றின் பயனைக் குறைக்கக் கூடிய எதனையும் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டாம். அந்த ஒப்பற்ற பாரம்பரியங்களை நிறுவியவர்கள் அவற்றுக்கான வெகுமதியைப் பெற்றுவிட்டார்கள். அவை சீர்குழைக்கப்பட்டால் அதற்கான பொருப்பை நீரே ஏற்க வேண்டும். அறிஞர்களினதும் மேதைகளினதும் அனுபவங்களிலிருந்து எப்போதும் எதையாவது கற்றுக் கொள்வீராக. அரச விவகாரங்களில் அவர்களை அடிக்கடி கலந்தாலோசித்து இந்த நாட்டில் உமது முன்னோர் நிலை நாட்டிய சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் தொடர்ந்தும் பேணிவருவீராக.

பல்வேறு மனித வர்க்கத்தினர்

மனிதர்கள் பல வர்க்கங்களைச் சேர்ந்தவர்களென்பதை மறக்க வேண்டாம். ஒரு வர்க்கத்தின் முன்னேற்றம் மற்றெல்லா வர்க்கங்களிலும் தங்கியுள்ளது. ஒரு வர்க்கம் மற்றைய வர்க்கங்களை விட்டும் சுதந்திரமாக வாழ முடியாது. எம்மிடத்தில் இறைவனின் போர்வீரர்களைக் கொண்ட இராணுவம் இருக்கின்றது. சிவில் அதிகாரிகளைக் கொண்ட நிறுவனங்கள் இருக்கின்றன. எமது நீதி பரிபாலனத் துறையினர், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவோர் இறைவரி சேகரிப்போர், எமது வெகுஜனத் தொடர்பு அதிகாரிகள் ஆகியோரும் இருக்கின்றார்கள். மக்களை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மத்தியில் தலைவரி - நிலவரி செலுத்துவோரும் முஸ்லிம்களும் மற்றும் வேதங்களைப் பின்பற்றுவோறும் இருப்பதோடு அவர்களிடையே வர்த்தகர்களும் கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளிகளும் இருக்கின்றார்கள். அவர்களுக்காக இறைவன் பல உரிமைகளையும், கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கின்றான். அவை அனைத்தும் புனித குர்ஆனிலும் இறைத்தூதர் அவர்களின் அறிவுரைகளிலும் விபரிக்கப்பட்டுப் பேணப்பட்டிருக்கின்றன.back 1 2 3 4 5 6 7 next