அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்முன்னைய அத்தியாயங்களில் அஹ்லுல் பைத்தினரின் தூய்மை பற்றி அறிந்து கொண்டோம். இங்கு அவர்களின் தராதாம்: தகுதி பற்றி அறிகின்றோம். பின்பற்ற வேண்டிய இரண்டு விடயங்களில் ஒன்று அல்குர்ஆன்.மற்றது அஹ்லுல் பைத் இது அண்ணலாரின் அருமைக் கட்டளையாகும்.

மேலும் ஹவ்லுல் கவ்ஸரில் என்னிடம் வரும் வரை அவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மாட்டாது என்ற ஆணித்தரமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது அஹ்லுல் பைத்தினர் அச்சொட்டாக அல்குர்ஆனின் வழியே நடப்பவர்கள் என்பதே அதன் கருத்தாகும்.

அறிஞர் பெருமக்களின் முடிவுகளின் படி அண்ணலாரின் வாழ்வு அல்குர்ஆனாகவே இருந்தது. அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர்களை பின்பற்றி வாழ்தல் என்பது அல்குர்ஆனின் அதே வாழ்க்கையேயாகும். அதுபோல் அல்குர்ஆனையும் அண்ணல் நபிகளாரையும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அச்சொட்டாக அடி தவறாமல் அஹ்லுல் பைத்தினர் பின்பற்றி நடந்தனர். அதனால் அஹ்லுல் பைத்தினரைப் பின்பற்றி நடத்தல் எம் மீது கடமையாகின்றது.

அஹ்லுல் பைத்தினரில் ஒவ்வொருவரும் அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி நேரடி கண்காணிப்பில் வளர்ந்தவரே. அண்ணலாரின்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அரவணைப்பில், வழிகாட்டுதலிலே அவர்கள் வாழ்ந்தனர்.

அதனாலேயே எம் பெருமானார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்குர்ஆன், அஹ்லுல் பைத் என்ற இரு விடயங்களையும் (தக்லைன்) பின்பற்றி நடக்குமாறு எமக்கு ஏவினார்கள்.

அஹ்லுல் பைத்தினர் ஒவ்வொருவரினதும் தாரதண்மியங்கள் பற்றி பிறிதொரு அத்தியாயத்தில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்!

கேள்வி கேட்பேன்

அல்குர்ஆன், அஹ்லுல் பைத் ஆகிய இரண்டு விடயங்களை பின்பற்றி நடக்குமாறு எம்மை ஏவிய அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அவற்றை நாம் பின்பற்றி நடந்தோமா என்பது பற்றி (மறுமையில்) கேள்வி கேட்கக் கூடியவர்களுமாய் இருப்பார்கள். இதிலிருந்து பின்பற்றி நடப்பது என்பது எவ்வளவு கட்டாயமானது என்பது தெளிவாகின்றது அல்லவா?

ஒரு முறை அண்ணல் நபிகள்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி நான் உங்களை விடவும் உயர்ந்தவன் தானே என வினவினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அனைவருமே ஆம் எனப் பதிலலித்தார்கள். அப்போது நபியவர்கள் நான் உங்களிடம் இரண்டு விடயங்களையிட்டுக் (கேள்வி) கேட்கக் கூடியவனாக இருப்பேன். ஓன்று: அல்குர்ஆன், அடுத்து எனது அஹ்லுல் பைத் என்று கூறினார்கள். (ஆதாரம்: ஸுயுதி இமாம்: இஹ்யாவுல் மையித் 38ம் பக்கம்.)

முன்னர் குறிப்பிட்ட ஹதீதுகளில் அண்ணல் நபிகள் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தக்லைன் இரண்டு விடயங்களை பின்பற்றி நடக்குமாறு தமது வாழ்வின் அந்திமப்பகுதியில் வஸியத் செய்திருந்ததை அறிந்தோம். அவை இரண்டினையும் நாம் சரியாக நபிகளாருக்குப் பின்னால் பின்பற்றி வாழ்ந்தோமா என்பதற்கு ஒரு பரீட்சை நடைபெரும் என்பதையே இந்த ஹதீத் குறிப்பிடுகின்றது எனலாம். இதிலிருந்து அந்த இரண்டு விடயங்களினதும் கனத்தினை நாம் அறியக்கூடியதாய் இருக்கின்றது. back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next