முக்கிய விடயங்கள்'இரண்டு முத்ஆக்கள் நபிகளாரின் காலத்தில் இருந்தன. அவ்விரண்டையும் செய்வதை நான் தடுக்கிறேன். அவற்றை செய்வோருக்கு தண்டனையும் வழங்குவேன். அவை பெண்களின் முத்ஆவும், ஹஜ்ஜின் முத்ஆவுமாகும்.'

இதே பொருளைக் கொண்டுள்ள ஹதீஸ், சுனன் பைஹகீ- பாக.7, பக்.206 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்ஆ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும், முதலாம் கலீபாவின் காலத்திலும், இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியிலும் ஹலாலாக இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வந்ததாகவும், பின் இரண்டாம் கலீபா, தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியில் அதனைத் தடைசெய்ததாகவும் அறிவிக்கும் சுமார் 25 ஹதீஸ்களை, 'அல்கதீர்' கிரந்தத்தின் ஆசிரியர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கிரந்தங்களில் இருந்து தொகுத்துள்ளார். (அல்கதீர்- பாக.3பக்.332)

அஹ்லுஸ் சுன்னாக்களின் அறிஞர்களுக்கு மத்தியில், ஏனைய சட்டங்களில் போன்று இதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர், இது நபியுடைய காலத்திலேயே மாற்றப்பட்டு விட்டதாகவும், சிலர், நபியுடைய காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்து, இரண்டாம் கலீபாவின் காலத்திலேயே மாற்றப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இன்னும் சிறு தொகையினர், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். பிக்ஹ் சட்டங்கள் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படும் ஓர் அம்சமாகும்.

அதேவேளை, ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.

இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.

      

அதேவேளை, இஸ்லாம் அனுமதித்துள்ள இச்சட்டத்தை தீய வழியில் பிரயோகிப்பதையும் பெண்களை இழிவாகக் கருதுவதையும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களினால் இது மாசுபடுத்தப் படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சிலர் தவறு செய்கின்றார்கள் என்பதற்காக, இச்சட்டத்தை மாற்ற நினைப்பதும் குறைகூறுவதும் தவறானதாகும். எனவே, தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், மார்க்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயலக் கூடாது என்பது நமது நிலைப்பாடாகும்.

16. ஷீயாக்களின் வரலாற்றுச் சுருக்கம்

ஷீயாக்களின் வரலாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதை அதிகமான ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றில் சில:

'நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்காரியங்களும் செய்தார்களோ, அவர்கள் தான் படைப்பினங்களில் மிகவும் சிறந்தவர்கள்.'   (98: 07)

மேற்படி திருமறை வசனத்திற்கு விரிவுரை எழுதியவர்கள், அண்ணல் நபிகளார் கூறிய ஒரு ஹதீஸை எடுத்தாள்கின்றனர். அதன் பிரகாரம், 'இந்த ஆயத்தில் குறிக்கப்பட்டுள்ள மக்கள் அலீயும் அவரது நேசர்களுமே' என அன்னார் மொழிந்துள்ளார்கள். (இந்த ஹதீஸில் நேசர்கள் என மொழிபெயர்க்கப் பட்டுள்ள சொல்லுக்கு அரபு மொழியில் ஷீஆ என்ற பதமே இறை தூதரால் பிரயோகிக்கப் பட்டுள்ளது.)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next