இமாமத்அஹ்லுல்பைத் இமாம்கள், பாவங்களை விட்டும் பரிசுத்த மானவர்களாவர் என நாம் நம்புவதால் அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றையும் குர்ஆன், ஸுன்னா ஆகியவற்றுக்கு அடுத்ததாக மார்க்கச் சட்டங்களுக்கு ஆதாரங்களாகக் கொள்கின்றோம்.

'நாங்கள் உங்களுக்குச் சொல்வதெல்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடமிருந்து எங்கள் தந்தையரை வந்தடைந்து, அவர்களிடமிருந்து எமக்குக் கிடைத்தவையேயன்றி வேறில்லை' என்று மேற்படி இமாம்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இமாம்கள் குறிப்பிடும் அனைத்துமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கருத்து வெளிப்பாடுகளாக அமைகின்றன. மேலும், நம்பகத் தன்மையும் இறையச்சமும் கொண்டு, மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களிடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதாகும். இமாம்களின் ஹதீஸ்களை இவ்வகையிலும் நோக்கலாம்.

இமாம் முஹம்மத் இப்னு அலீ அல்பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஜாபிர் (ரழி) அவர்களுக்குச் சொன்னார்கள்:

'ஜாபிரே! நாம் உங்களுக்கு எமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டும் மன இச்சையைக் கொண்டும் எதையும் கூறுவோமாயின், நாங்கள் அழிந்து விடுவோம். ஆனால், நாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து சேமித்து வைத்த தகவல்களையே கூறுகின்றோம்.'      (ஜாமிஉ அஹாதீஸ் அஷ்ஷீயா, பாக.1,பக்.18)

ஒரு மனிதர் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்க, இமாம் அதற்குப் பொறுத்தமான பதிலளித்தார்கள். அம்மனிதர், குறித்த விடயத்தில்  இமாமின் கருத்தை மாற்றியமைப் பதற்காக அவர்களுடன் தர்க்கத்தில்; ஈடுபட முனைந்த போது, இமாம், அவரை நோக்கி, 'இதை விட்டு விடுங்கள். நான் உங்களுக்குக் கூறிய அனைத்து பதில்களும் நபியிடமிருந்து வந்தவையே. இதில் எவ்வித கலந்துரையாடலுக்கும் விவாதத்துக்கும் இடமில்லை' என்று கூறினார்கள்.  (உசூலுல் காபீ, பாக.1, பக்.58)

நமது ஹதீஸ் கிரந்தங்களில் அல் காஃபீ, தஹ்தீப், இஸ்திப்ஸார், மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ் போன்றன முக்கிய மானவை. அதன் அர்த்தம், இவற்றிலுள்ள அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹானவை, நிராகரிக்க முடியாதவை என்பதல்ல. ஒவ்வொரு ஹதீஸையும் அறிவித்தவரது வாழ்க்கைக் குறிப்புகள் தெளிவாக சேகரிக்கப்பட்டுள்ள றிஜால் பற்றிய நூல்களும் நம்மிடம் உள்ளன. அறிவிப்பாளர் உரிய நிபந்தனைகளுக்கு உட்படக்கூடிய ஒழுக்க சீலராகவும், இறையச்சமுள்ளவராகவும் இருந்தால், அவர் அறிவித்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இல்லையெனில் அது நிராகரிக்கப்படுகின்றது. அது எந்த கிரந்தத்தில் பதிவுசெய்யப் பட்டிருப்பினும் சரியே.

சில ஹதீஸ்கள், ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சகல நிபந்தனைகளையும் கொண்டிருந்தும், சட்ட வல்லுனர்களால் அன்று முதல் இன்று வரை வேறு பல காரணங்களுக்காக அது பயன்படுத்தப்படாது விடப்பட்டி ருந்தால், அது 'முஃரழ் அன்ஹா' என அழைக்கப் படுகின்றது. அதுவும் செல்லுபடியற்றதாகும்.

எனவே, நமது நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர், மேற்குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள ஹதீஸ்களை, அவை பற்றிய ஆய்வுகளைக் கவனத்திற் கொள்ளாது பயன்படுத்த முனைவார்களாயின் அவர்களால் பூரணமான அல்லது உண்மையான விளக்கத்தைப் பெறுவது சாத்திய மற்றதாகி விடும். எந்தவொரு ஹதீஸைப் பொறுத்தவரையிலும் அதன் அறிவிப்பாளர் மற்றும் ஏனைய காரணிகளைப்; பொறுத்தே அது சரியானதா? பிழையானதா என்பது தீர்மானிக்கப் படுகின்றது.

வேறொரு விதத்தில் சொல்வதானால், இன்று பிரபல்யம் அடைந்திருக்கும் மத்ஹபுகளிடம் ஸிஹாஹ் (சரியானவை) எனும் பெயரில் ஹதீஸ் கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவையென அவற்றின் ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வேறு சிலரும் அவை சரியானவையெனக் கருதியுள்ளனர்.

ஆனால், நமது ஹதீஸ் கிரந்தங்களைத் தொகுத்தவர்கள் நம்பத்தகுந்த நல்லடியார்களாக இருந்த போதிலும், அவர்கள் தொகுத்த ஹதீஸ்களின் உண்மை நிலையை அறிவதற்காக, அவற்றை அறிவித்தவர்களின் வரலாற்றை ஆராய்ந்த பின்னரே அவ சரியானவையா, அல்லது பிழையானவையா என்ற முடிவுக்கு வர முடிகின்றது.

நம்முடைய நம்பிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் பலர் இது பற்றி அலட்சியம்  செய்வதால் பிழையான தகவல்களை முடிவுகளாகப் பெற வழிபிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

எனவே, அல்குர்ஆனுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் ஹதீஸ்களுக்கும் அடுத்தபடியாக பன்னிரண்டு இமாம்களின் ஹதீஸ்களும் -நல்லவர்கள், நம்பத்தகுந்தவர்களினால் அறிவிக்கப் பட்டிருப்பின்- மூலாதாரமாகக் கொள்ளப் படுகின்றன.

 back 1 2 3 4 5 6 7 8