இமாமத்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கதீர் ஹும்' எனும் இடத்தில், எழுந்து குத்பா பிரசங்கம் நிகழ்த்தி விட்டுச் சொன்னார்கள்:

'நான் உங்களிடமிருந்து விடைபெறும் நாள் நெருங்கி விட்டது. இதனால், உங்களுக்கு மத்தியில் பெறுமதி மிக்க இரண்டு பொக்கிஷங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் முதலாவது- நேர்வழியும் ஒளியும் கொண்டுள்ள இறைவேதம். மற்றையது- எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர். எனது குடும்பத்தார் விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகின்றேன்.' இதை மூன்று முறை குறிப்பிட்டுச் சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் - பாக 4 - பக் 1873)

இதே பொருள்பட ஸஹீஹ் திர்மிதியிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 'நீங்கள் இவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள்.'   (திர்மிதீ - பாகம் 5 - பக் 662)

இந்த ஹதீஸ் சுனன் தாரமீயிலும் (பாக 2 - பக் 432), கஸாயிஸ் நஸயீயிலும் (பக் 20), முஸ்னத் அஹ்மதிலும் (பாக 5 - பக் 182) மற்றும் அதிகமான இஸ்லாமிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது முதவாதிரான (மறுப்புக்கிடமின்றி அனைவரிடத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட) ஹதீஸாகும். எந்தவொரு முஸ்லிமும் இதனை நிராகரிக்க முடியாது.

இந்த ஹதீஸை நபியவர்கள், ஓரிடத்தில் மாத்திரம் கூறவில்லை. பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

ஆனால், அல்குர்ஆனுக்கு அடுத்ததான இவ் உயர் நிலையை நபிகளாருடைய குடும்பத்தினர் அனைவருமே பெற்றுக் கொள்வதென்பது சாத்தியமற்றதும் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் புறம்பானதுமாகும். எனவே, இச்சிறப்பு, நபிகளாருடைய குடும்பத்தில் தோன்றி, பாவங்களை விட்டும் பரிசுத்த மாக்கப்பட்டவர்களாக இருந்த இமாம்களையே சாரக்கூடியதாக இருக்கின்றது.

(சில பலவீனமான ஹதீஸ்களில், அஹ்லுல் பைத் என்பதற்குப் பதிலாக 'சுன்னத்தீ'-எனது வழிமுறை- என்று குறிப்பிடப் பட்டு வந்துள்ளது.)

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், சுனன் அபீதாவுத், முஸ்னத் அஹமத் போன்ற பிரபல்யம் வாய்ந்த ஹதீஸ் கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு: 'மறுமை நாள் வரும் வரை அல்லது குறைஷிகளைச் சேர்ந்த பன்னிரண்டு கலீபாக்கள் உங்கள் மீது வரும் வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும்.' (புஹாரி - பாக 3 - பக் 101திர்மிதீ - பாக 4 - பக் 50அபூதாவுத் - பாக 4 - கிதாபுல் மஹ்தி)

இமாமிய்யாக்களுடைய அகீதாவிலே, பெயர் குறிப்பிடப் பட்டுள்ள பன்னிரண்டு இமாம்கள் பற்றிய கோட்பாட்டைத் தவிர, இந்த ஹதீஸுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறொரு விளக்கத் தைக் கொடுக்க முடியாது.

 back 1 2 3 4 5 6 7 8 next