மறுமை வாழ்வு8. மறுமை நாளில் ஷபாஅத்

மறுமை நாளில் நபிமார்களும் பரிசுத்த இமாம்களும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் அனுமதி யுடன் சில பாவிகளுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் அவ்வாறு பரிந்துரை செய்யப் படுவோர், அல்லாஹ்வின் பாவமன்னிப்பைப் பெற்று, அவனது அருளுக்குத் தகுதியுள்ளவர்களாக மாறி விடுவர் என்றும் நாம் நம்புகின்றோம்.

அல்லாஹ்வுடனும் அவனது நேசர்களுடனுமான தம் தொடர்பைத் துண்டிக்காதவர்களுக்கே ஷபாஅத் பெறும் பாக்கியம் உண்டு. இதனடிப்படையில், ஷபாஅத் செய்யப்படுவதற்கான தகுதி பெறுவதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவை, மனிதர் களது செயற்பாடுகளுடனும் எண்ணங்களுடனும் தொடர்புடை யவையாகும்.

'அவன் பொருந்திக் கொண்டவரைத் தவிர, (வேறெவருக்கும்) இவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள்."   (21:28)

ஷபாஅத் என்பது, ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நல்வழியில் மனிதர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு வழிமுறையாகும். அவர்கள் பாவத்தில் மூழ்குவதையும், இறைநேசர்களுடனான தொடர்புகளை துண்டிப்பதையும் தடுக்கின்ற ஓர் உத்தியாகும். அவர்களது உள்ளங்களில் எழுகின்ற தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, நல்வழியின் பால் அவர்களைத் திசை திருப்ப முயற்சிக் கின்ற, தவறுகளில் விழுகின்ற போது தொடர்ந்தும் அதில் மூழ்காமல் மீண்டு வர அவரைத் தூண்டுகின்ற சாதனமாகும்.

மறுமை நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள் ''ஷபாஅதுல் குப்ரா" எனும் மாபெரும் பரிந்துரை செய்வார்கள். அவர்களை யடுத்து ஏனைய நபிமார்களும் பரிசுத்த இமாம்களும் ஏன் உலமாக்கள், ஷுஹதாக்கள், முஃமின்கள், ஆரிபீன்கள் மற்றும் அல்குர்ஆன், சாலிஹான நல்லமல்கள் என்பனவும் மனிதர்களுக்கு பரிந்துரை செய்ய முடியும்.

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் குறிப்பிடுகின்றார்கள்: 'முந்தியோர் பிந்தியோர்களில் எவரும், மறுமை நாளில் நபிகளாரின் ஷபாஅத்து தேவையற்றவர்களாக இல்லை." (பிஹாருல் அன்வார் - பாக.8, பக்.42)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி கூறினார்கள்:

'மறுமையில், ஷபாஅத்து செய்யக் கூடியவை ஐந்து. அல்குர்ஆன், உறவினர்களை சேர்ந்து நடத்தல், அமானத், உங்களது நபி மற்றும் உங்களது நபியின் குடும்பத்தினர்." (கன்சுல் உம்மால் பாக 14 பக் 390 ஹதீஸ் 39041)

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 'மறுமை நாளில் ஆலிமும் (அறிஞர்) ஆபிதும் (வணக்கவாளி) அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார்கள். ஆபிதைப் பார்த்து நீர் சுவர்க்கம் செல்லலாம் என அல்லாஹ் அனுமதி வழங்குவான். ஆலிமிடம், 'நீர் சற்று நில்லும், மக்களை நீர் சிறப்பாக பயிற்றுவித் தமையின் பொருட்டால் அவர்களுக்கு பரிந்துரை செய்யும்" என்று அல்லாஹ் கூறுவான்." 

 (பிஹாருல் அன்வார் -பாக 8 - பக் 56 - ஹதீஸ் 66)back 1 2 3 4 5 6 7 8 9 next