நபித்துவம்நபிமார்களும் சீர்திருத்தப் பணியும்

நமது நம்பிக்கையின் படி, இஸ்லாம் மார்க்கம், வெறுமனே மனிதர்களது ஆன்மீக நிலையை தெளிவுபடுத்தி, நல்லொழுக் கத்தை வரையறை செய்வதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அது, சமூக வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் சீர்படுத்திச் சிறப்புறச் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. அன்றாட வாழ்வுக்கு அவசியமான பல்வேறுபட்ட சாஸ்திரங்களையும் கலைகளையும் மக்கள் நபிமார்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். அல்குர்ஆனும் அவற்றுள் சிலவற்றைத் தொட்டுக் காட்டுகிறது.

சமூகங்களின் மத்தியில் நீதியை நிலைநிறுத்து வதும் நபிமார்களுடைய முக்கிய பணியாக விளங்கியது என நாம் நம்புகிறோம்.

''நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பி வைத்தோம். அவர்களுடன் வேதத்தையும், நீதியைக் கொண்டு நிலைத் திருப்பதற்காக தராசையும் இறக்கினோம்.||  (57: 25(

மானுட சமத்துவம் பேணல்

நபிமார்கள் எவரும் இன, வர்க்க, குல ரீதியான வேறுபாடுகளை அங்கீகரிக்க வில்லை. சகல குலத்தாரும், சகல மொழி பேசுவோரும் அவர்களது பார்வையில் சமத்துவம் மிக்கோராகவே காணப்பட்டனர். அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

''மனிதர்களே! நிச்சயமாக நாம், உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். இன்னும், ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணிய முள்ளவர் உங்களில் மிக்க பயபக்தி உடையவர் தான்.||(49:13)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள், ஹஜ்ஜதுல் விதாவின் போது, மினாவில் வைத்து, ஒட்டகத்தின் மீது அமர்;ந்தவர்களாக மக்களை நோக்கிச் சொன்னார்கள்:

''மனிதர்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவனும் ஒருவன். உங்கள் தந்தையும் ஒருவர். எனவே, இறையச்சத்தின் மூலமாக அல்லாமல், வேறெதனாலும் ஓர் அறபி அஜமியை விட சிறந்தவரில்லை. ஓர் அஜமியும் அறபியை விட சிறந்தவரில்லை. இன்னும், கறுப்பனுக்கு சிவந்த நிறமுடையவனை விட சிறப்பில்லை, சிவந்த நிறமுடை யவனுக்கு கறுப்பனை விட சிறப்புமில்லை. எனவே, நான் இறை தூதை எத்தி வைத்து விட்டேனா?|| என்று வினவினார்கள். அதற்கு அங்கிருந்தோர் ''ஆம்|| எனக் கூற, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ''இங்கு சமுகமளித் திருப்பவர்கள், வராதிருப்போருக்கு இவற்றைத் தெரியப் படுத்துங்கள்|எனக் கூறினார்கள்.  ) தப்ஸீருல் குர்துபி - பா 9 - பக் 6162)

இஸ்லாமும் மனிதனது இயல்பூக்கமும்

ஏகத்துவத்தின் அடிப்படையில் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையும், நபிமார்களது கற்பித்தலின் அடிப்படைகளும் இயல்பாகவே மனிதர்களுடைய ஆத்மாவுடன் மேலோட்டமாக பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன என நாம் நம்புகின்றோம். இறைத் தூதர்கள், அதிக கனி தரக்கூடிய இவ்விதைகளுக்கு வஹியெனும் கடலிலிருந்து நீர் பாய்ச்சி, அவற்றின் ஓரங்களில் இருந்து ஷிர்க் போன்றகளைகளை அப்புறப்படுத்தினார்கள்.

''எந்த இயல்பில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ,அதுவே அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றமில்லை. அதுவே நிலையான மார்க்க மாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலா னோர் இதை அறிய மாட்டார்கள்.'(30: 30)

இதனால் தான், மக்களிடையே சமய நம்பிக்கை தொன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பெரும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப் படி, நாஸ்திகம் என்பது மிகவும் அரிதாகக் காணப்பட்ட ஒன்றாகும். இதனால் தான், வாழ்நாள் முழுவதும் சமய விரோத அடக்குமுறைகளுக்கும் துர்ப் பிரசாரங்களுக்கும் மத்தியில் வாழ்ந்த மக்களும் கூட, சுதந்திரத்தின் பின்னான வாழ்வில் சமயத்தின் பால் வேட்கையோடு ஓடி வருகின்றார்கள்.

ஆனால், முன்னிருந்த பல சமுதாயத்தவர்களின் வளர்ச்சியடையாத கலாசாரப் பண்புகள், அவர்களது மார்க்கத்திலும் ஒழுக்க நெறிமுறைகளிலும் மூடக் கொள்கைகள் இரண்டறக் கலப்பதற்குக் காரணமாக அமைந்திருந்தன என்ற உண்மையையும் மறுக்க முடியாது. மனிதர்களது இயல்பூக்கமான மார்க்கத்தை, இத்தகைய கறைபடிந்த மூடக் கொள்கைகளிலிருந்து பரிசுத்தமாக்குவதும் நபிமார்களின் ஒரு முக்கிய பணியாக விளங்குகிறது.

 back 1 2 3 4 5 6 7