நபி ( ஸல் ) அவர்கள் இமாம் அலீ ( அலை ) அவர்களுக்குப் போதித்த நாற்பது ஹதீஸ்கள்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 நபி ( ஸல் ) அவர்கள் இமாம் அலீ ( அலை ) அவர்களுக்குப் போதித்த நாற்பது ஹதீஸ்கள் அலீயே ! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மறுமையின் வீட்டையும் எதிர்பார்த்தவராக யார் எனது உம்மத்திற்காக என்னுடைய நாற்பது ஹதீஸ்களைப் பாதுகாத்துக் கொள்கின்றாரோ அவர் மறுமை நாளில் நபிமார்கள் , உண்மையாளர்கள் , ஷுஹதாக்கள் , நல்லடியார்கள் ஆகியோருடன் எழுப்பப்படுவார் . இவர்கள் அனைவரும் அவருக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள் ' என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அலீ ( அலை ) அவர்கள் , ' அந்த ஹதீஸ்களை எனக்கு அறிவித்துத் தாருங்கள் யாரசூலல்லாஹ் ! ' எனக் கேட்டார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் ஒருவன் , அவன் தனித்தவன் , இணைதுணையற்றவன் என்பதை நம்பிக்கை கொள்ளல் , அவனை வணங்குதல் , அவனல்லாதவற்றை வணங்காதிருத்தல் , முழுமையான வுழுவுடன் தொழுகைகளை அவற்றிற்குரிய நேரத்தில் நிறைவேற்றல் , அவற்றைப் பிற்படுத்தாதிருத்தல் , - நிச்சயமாக காரணமின்றித் தொழுகையைப் பிற்படுத்துவதில் அல்லாஹ்வின் கோபம் இருக்கின்றது . - ஸக்காத்தை நிறைவேற்றல் , ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல் , உங்களிடம் போதிய செல்வமும் சக்தியும் இருந்தால் அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்தல் , உங்களது பெற்றோரைத் துன்புறுத்தாதிருத்தல் , அநாதைகளின் சொத்தை அநீதியாக உண்ணாதிருத்தல் , வட்டி உண்ணாதிருத்தல் , மதுபானத்தையும் , போதை தரும் எந்தவொரு பானத்தையும் அருந்தாதிருத்தல் , விபசாரத்திலோ தன்னினச் சேர்க்கையிலோ ஈடுபடாதிருத்தல் , கோள் மூட்டாதிருத்தல் , அல்லாஹ்வின் பெயரில் பொய்ச்சத்தியம் செய்யாதிருத்தல் , திருடாதிருத்தல் , தெரிந்தவர் , தெரியாதவர் யாராயினும் ஒருவருக்கெதிராக பொய்ச்சாட்சி கூறாதிருத்தல் , சிறியவரோ பெரியவரோ எவர் உண்மையைக் கொண்டு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளல் , நெருங்கிய உறவினனாக இருந்தாலும் அநீதியாளனுக்கு ஆதரவு வழங்காதிருத்தல் , மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு நடவாதிருத்தல் , பத்தினிப் பெண் மீது அவதூறு கூறாதிருத்தல் , முகஸ்துதிக்காக எதையும் செய்யாதிருத்தல் - முகஸ்துதி என்பது சிறிய ஷிர்க்காகும் . - உயரம் குறைந்தவனை கட்டயனே என்றோ , உயரம் கூடியவனை நெடியவனே என்றோ அவர்களைக் குறை கூறும் நோக்கில் அழைக்காதிருத்தல் , அல்லாஹ்வுடைய படைப்புகளில் எதனையும் பரிகாசம் செய்யாதிருத்தல் , சோதனைகள் மற்றும் கஷ்டங்களின் போது பொறுமையாயிருத்தல் , உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி தெரிவித்தல் , நீங்கள் செய்த பாவத்திற்காக அல்லாஹ் வழங்கவுள்ள தண்டனைகள் குறித்து அலட்சியம் காட்டாதிருத்தல் , அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கையிழக்காதிருத்தல் , உங்களது பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுதல் , - ஏனெனில் , பாவமன்னிப்புத் தேடுபவன் பாவமே செய்யாதவனைப் போன்றாவான் - இஸ்திஃக்பார் தேடிக் கொண்டே பாவங்களில் ஈடுபடாதிருத்தல் , - அவ்வாறு செய்தால் நீங்கள் அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதர்களையும் பரிகாசம் செய்பவர் போன்றாகி விடுவீர்கள் . - உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களெல்லாம் உங்களைத் தவறு செய்யத் தூண்டுபவையல்ல என்பதை அறிந்து கொள்ளல் , படைப்பினங்களின் திருப்திக்காக படைத்தவனின் கோபத்தைத் தேடிக் கொள்ளாதிருத்தல் , மறுமையை விட இவ்வுலகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருத்தல் , - ஏனெனில் இவ்வுலகம் அழிந்து விடக் கூடியது , மறுமையே நிரந்தரமானது – உங்களுக்கு சக்தியிருந்தும் உங்களது சகோதரர்களிடம் கஞ்சத்தனம் காட்டாதிருத்தல் , உங்களது பகிரங்க நிலை போலவே உங்களது இரகசிய நிலையும் இருத்தல் , உங்களது பகிரங்க நிலை அழகானதாகவும் இரகசிய நிலை இழிவானதாகவும் இல்லாதிருத்தல் , - அவ்வாறு நீங்கள் செய்தால் நீங்கள் முனாபிக்காக ஆகிவிடுவீர்கள் . – பொய்யுரைக்காதிருத்தல் , பொய்யர்களுடன் கலக்காதிருத்தல் , உண்மையைக் கேட்டு கோபப்படாதிருத்தல் , இயலுமான வரையும் உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் உங்களது பிள்ளைகளையும் உங்களது அயலாரையும் ஒழுக்கமாகப் பயிற்றுவித்தல் , நீங்கள் அறிந்துள்ளவற்றைக் கொண்டு அமல் செய்தல் , முறையற்ற விதத்தில் அல்லாஹ்வின் படைப்புகளை வேலை வாங்காதிருத்தல் , நெருங்கிய உறவினர்களுக்கும் தூரத்து உறவினர்களுக்கும் மென்மையானவராக இருத்தல் , பிடிவாதமுள்ள அதிகாரியாக இல்லாதிருத்தல் , தஸ்பீஹ் , தஹ்லீல் , துஆ , மரணத்தின் நினைவு , அதற்குப் பின்னுள்ள கியாமத் , சுவர்க்கம் , நரகம் முதலானவை பற்றிய நினைவு என்பவற்றை அதிகப்படுத்திக் கொள்ளல் , அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்தி அதிலுள்ளவாறு அமல் செய்தல் , முஃமினான ஆண்கள் பெண்களுக்கு நன்மை செய்வதிலும் கொடை கொடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுதல் , எதை உங்களுக்குச் செய்வதை விரும்பமாட்டீர்களோ அதை முஃமினான மற்றவர்களுக்கும் செய்யாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளல் , நற்செயல்களை விட்டும் தூரமாகாதிருத்தல் , எவர் மீதும் கடினமாக நடவாதிருத்தல் , நீங்கள் ஒருவருக்கு வழங்கிய கொடை பற்றி சொல்லிக் காட்டாதிருத்தல் , அல்லாஹ் உங்களுக்கு சுவர்க்கத்தைத் தயார்படுத்தும் வரை துன்யா உங்களிடத்தில் சிறைக்கூடமாக இருத்தல் . இந் நாற்பது ஹதீஸ்கள் - யார் இவற்றைக் கடைப்பிடித்து எனது உம்மத்திற்காகப் பாதுகாத்து வருகின்றாரோ அவர் அல்லாஹ்வின் அருளால் சுவனம் நுழைவார் . அவர் , நபிமார்கள் மற்றும் இமாம்களை அடுத்து மனிதர்களில் மிகச் சிறந்தவராகவும் , அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராகவும் இருப்பார் . அல்லாஹ் அவரை மறுமை நாளில் நபிமார்கள் , சித்தீக்கீன்கள் , ஷுஹதாக்கள் , ஸாலிஹீன்கள் ஆகியோருடன் எழுப்புவான் . இவர்கள் அனைவரும் அவருக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள் .
|